வனத்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த சம்பவம்: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டுகள் சிறை
|வனத்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கொடா மாவட்டம் லட்புரா தொகுதி முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. பவானிசிங் ராஜ்வத். இவர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி லட்புரா வனத்துறை அதிகாரி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில் புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டத்தை எதிர்த்து ஆதரவாளர்களுடன் பவானிசிங் ராஜ்வத் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, வனத்துறை அதிகாரியின் அலுவலகத்திற்குள் ஆதரவாளர்களுடன் நுழைந்த பவானிசிங் ராஜ்வத் பணியில் இருந்த வனத்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார்.
இது குறித்து வனத்துறை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பவானிசிங் ராஜ்வத்தை கைது செய்தனர். 10 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்த ராஜ்வத் பின்னர் ஜாமினில் விடுதலையானார். ஆனாலும், அவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வனத்துறை அதிகாரியை அறைந்த வழக்கு தொடர்பான விசாரணை ராஜஸ்தானில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்வத் குற்றவாளி என அறிவித்த கோர்ட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.