< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் மதமாற்ற தடை சட்டத்திற்கு மந்திரி சபை ஒப்புதல்
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மதமாற்ற தடை சட்டத்திற்கு மந்திரி சபை ஒப்புதல்

தினத்தந்தி
|
1 Dec 2024 7:46 AM IST

மதமாற்ற தடை சட்டத்திற்கு ராஜஸ்தான் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெய்ப்பூர்,

கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்ற தடை சட்ட மசோதாவிற்கு ராஜஸ்தான் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட மசோதா எதிர்வரும் கூட்டத்தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.

இது குறித்து ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் சர்மா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கட்டாய மதமாற்றத்தை தடுப்பதில் ராஜஸ்தான் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இதன்படி சட்டமன்றத்தில் 'ராஜஸ்தான் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட மசோதா- 2024' -ஐ தாக்கல் செய்ய மந்திரி சபையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல், மோசடி அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் ஒரு நபரின் மதத்தை மாற்றும் முயற்சியை இந்த சட்ட மசோதா தடை செய்கிறது. சட்டவிரோத மதமாற்றத்திற்காக ஒரு திருமணம் நடத்தப்பட்டால், அந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்கும் உரிமை குடும்ப நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து துணை முதல்-மந்திரி பிரேம் சந்த் பைரவா கூறுகையில், "மக்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத மதங்கள் மீது கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் விதமாக பிற மாநிலங்களில் இருக்கும் கொள்கைகளை பரிசீலித்து, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்