< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை: சப்-கலெக்டர் மீது தாக்குதல்.. வாகனங்களுக்கு தீ வைப்பு

தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள்

தேசிய செய்திகள்

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை: சப்-கலெக்டர் மீது தாக்குதல்.. வாகனங்களுக்கு தீ வைப்பு

தினத்தந்தி
|
14 Nov 2024 3:18 PM IST

சப்-கலெக்டரை தாக்கியதாக கூறி, சுயேட்சை வேட்பாளரை போலீசார் கைது செய்ய முயன்றபோது வன்முறை வெடித்தது.

டோங்க்:

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம், தியோலி-உனைரா சட்டசபை தொகுதியில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதிக்குட்பட்ட சம்ரவாடா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் சிலர் போராட்டம் நடத்தினர். 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோலிக்குப் பதிலாக யூனியாரா தாலுகா அதிகார வரம்பிற்குள் தங்கள் பகுதியைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் சுயேட்சை வேட்பாளரான நரேஷ் மீனாவும் போராட்டத்தில் பங்கேற்றார். வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது சின்னம் மங்கலாக தெரியும்படி அமைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சப்-கலெக்டர் அமித் சவுத்ரி, போலீசாருடன் அங்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, சப்-கலெக்டரை சுயேட்சை வேட்பாளர் நரேஷ் மீனா தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நேற்று இரவு வேட்பாளர் நரேஷ் மீனாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவரை கைது செய்ய விடாமல் தடுத்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், வேட்பாளரை கைது செய்வதில் போலீசார் உறுதியாக இருந்தனர். இதனால் போலீசாருக்கும், வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேட்பாளரின் ஆதரவாளர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

பின்னர் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வேட்பாளர் நரேஷ் மீனா இன்று கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், கிராமத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் மத்தியில் விறகு கட்டைகளை அடுக்கி தீ வைத்தனர். இந்த வன்முறை தொடர்பாக சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்