< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் இடைத்தேர்தல்: திருமண சடங்குகளுக்கு நடுவே வாக்கு செலுத்த வந்த மணப்பெண்
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: திருமண சடங்குகளுக்கு நடுவே வாக்கு செலுத்த வந்த மணப்பெண்

தினத்தந்தி
|
13 Nov 2024 5:16 PM IST

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் இளம்பெண் ஒருவர் மணக்கோலத்தில் வருகை தந்து தனது வாக்கை செலுத்தினார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தவுசா, ஜுன்ஜுனு, தியோலி-யுனியாரா, கின்ஸ்வார், சோராசி, சலும்பார் மற்றும் ராம்கர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 20-ந்தேதி எண்ணப்பட உள்ளன.

இந்த 7 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரத் ஆதிவாசி கட்சி கூட்டணியிடம் 5 தொகுதிகளும், பா.ஜ.க. மற்றும் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியிடம் தலா ஒரு தொகுதியும் இருந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உயிரிழந்ததாலும், 5 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைக்கு தேர்வானதாலும் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தவுசா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு, குஷி என்ற இளம்பெண் மணக்கோலத்தில் வருகை தந்து தனது வாக்கை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்றைய தினம் எனது திருமணம் நடைபெற்றது. இன்று திருமணத்திற்கு பிந்தைய சடங்குகள் வீட்டில் நடந்து வருகின்றன. இதற்கிடையில் எனது வாக்கை செலுத்துவதற்காக வந்துள்ளேன். வாக்கு செலுத்துவது மிகவும் அவசியமாகும். அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்