< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான்: முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் கலைப்பு
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் கலைப்பு

தினத்தந்தி
|
28 Dec 2024 9:15 PM IST

ராஜஸ்தானில் முன்னாள் காங்கிரஸ் ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் கலைக்கப்பட்டுள்ளன.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு அங்கு அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, நிர்வாக வசதிக்காக 17 புதிய மாவட்டங்கள் மற்றும் 3 புதிய மண்டலங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது.

இதற்கான அறிவிப்பாணை கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி வெளியிடப்பட்டது. இது மட்டுமின்றி, மேலும் 3 புதிய மாவட்டங்களை உருவாக்கவும் அசோக் கெலாட் அரசு திட்டமிட்டிருந்தது. அது தொடர்பான அறிவிப்பு 2023 சட்டசபை தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதன் பிறகு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால், 3 புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பானை வெளியிடப்படவில்லை.

இதனை தொடர்ந்து 2023 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு, ராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்களை கலைப்பதற்கு திட்டமிட்டது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற மாநில மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மந்திரிசபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரிசபை உறுப்பினர் ஜோக்ராம் பட்டேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "அரசியல் ஆதாயத்திற்காகவே காங்கிரஸ் ஆட்சியில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 17 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் கலைக்கப்படுகின்றன. அதோடு தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 3 புதிய மாவட்டங்களும் கலைக்கப்படுகின்றன. இதன்படி ராஜஸ்தானில் தற்போது 41 மாவட்டங்களும், 7 மண்டல பிரிவுகளும் உள்ளன" என்று தெரிவித்தார்.

இது குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட் கூறுகையில், "மாநில அரசு குழப்பத்தில் உள்ளது என்பதையே இந்த முடிவு காட்டுகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான ராஜஸ்தானில், நிர்வாக காரணங்களுக்காகவே புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ராஜஸ்தானை விட குறைந்த மக்கள் தொகையை கொண்ட குஜராத்தில் 33 மாவட்டங்கள் இருக்கின்றன. சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால் மக்கள் பயனடைவார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்