< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் குடும்ப அட்டைகளுக்கு ரூ.5,000 மழை நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் குடும்ப அட்டைகளுக்கு ரூ.5,000 மழை நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Dec 2024 3:19 PM IST

பெஞ்சல் புயல் கோரத்தாண்டவத்தால் புதுச்சேரியில் விடிய, விடிய கனமழை கொட்டியது.

புதுச்சேரி,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரி நகர பகுதி மட்டுமல்லாமல் பாகூர், வில்லியனூர், அரியாங்குப்பம், மணவெளி, திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காணும் இடங்கள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளுக்கு படகுகளில் சென்று, வீடுகளில் தத்தளித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சேதம் அடைந்த படகுகளுக்கு தலா ரூ.10,000, விவசாய நிலம் ஹெக்டருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்கப்படும். மழை வெள்ளத்தில் இறந்த மாட்டிற்கு ரூ.40,000, கிடாரி கன்று குட்டிக்கு ரூ.20,000-ம் வழங்கப்படும். சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.10,000-ம் நிவாரணம் வழங்கப்படும். மழை வெள்ளத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். புதுச்சேரியில் மழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்