< Back
தேசிய செய்திகள்
உமர் அப்துல்லா பதவியேற்பு விழா: ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
தேசிய செய்திகள்

உமர் அப்துல்லா பதவியேற்பு விழா: ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

தினத்தந்தி
|
16 Oct 2024 11:40 AM IST

ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று பதவியேற்க உள்ளார்.

ஸ்ரீநகர்,

நடந்து முடிந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில்,மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1 என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைக்கும் பணிகளை தேசிய மாநாடு கட்சி முடுக்கி விட்டு உள்ளது. அதன்படி கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 10ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா நடத்திய இந்த கூட்டத்தில் அனைத்து புதிய எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக (முதல்-மந்திரி) தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆதரவு கொடுத்து உள்ளனர். இதனால் அக்கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்து உள்ளது.

இதையடுத்து, கடந்த 11ம் தேதி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா சந்தித்தார். அப்போது தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று பதவியேற்க துணை நிலை கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பதவியேற்பு விழா ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.

மேலும் செய்திகள்