< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்

தினத்தந்தி
|
7 March 2025 10:59 AM IST

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து லக்னோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லக்னோ,

மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் குறித்து திட்டமிட்டு அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி பரப்பியதாகவும், அந்த பேட்டி ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பட்டதாகவும் வழக்கறிஞர் நிர்பேந்திர பாண்டே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராக லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிநாட்டு பிரமுகரை சந்திக்க முன்பே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அவரது வழக்கறிஞர் மனு அளித்தார்.

இந்த மனுவை நிராகரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி அலோக் வர்மா, நேரில் ஆஜராக தவறியதற்காக ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதே குற்றச்சாட்டில் புனே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்