ராகுல் காந்தி ஒரு காமெடி கிங் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் விமர்சனம்
|மக்களிடம் எடுபடாத பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி மீண்டும் செய்து வருகிறார் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடி, அதானி ஆகியோரை கேலி செய்யும்வகையில், அவர்களது உருவ முகமூடி அணிந்தவர்களுடன் பேட்டி எடுப்பதுபோல் ராகுல்காந்தி போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், அவரை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கிண்டலாக விமர்சித்துள்ளார். அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராகுல்காந்தி தனக்கு எது நன்றாக வருவோ, அதை செய்துள்ளார். அதுதான் 'ஸ்டாண்ட் அப் காமெடி'. அவரது பொய் குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் விசாரணைகளின் முடிவில் நொறுங்கி வருகின்றன.
கைப்பாவையான அவர், ஏற்கனவே மக்களிடம் எடுபடாத பொய் பிரசாரத்தை மீண்டும் செய்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து அவர் அடைந்து வரும் தோல்விகள், அவரது பழைய குற்றச்சாட்டுகளை யாரும் கண்டுகொள்வது இல்லை என்பதற்கு சாட்சிகள். தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக 'காமெடி கிங்' (கோமாளி ராஜா) இப்படிப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.