கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலருக்கு பஞ்சாப் விவசாய சங்கத்தினர் ஆதரவு
|கங்கனா ரனாவத்தை அறைந்த சி.ஐ.எஸ்.எப். பெண் காவலருக்கு பஞ்சாப் விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சண்டிகார்,
பிரபல நடிகையும், இமாச்சல பிரதேசம் மண்டி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகார் விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர், கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விவசாய போராட்டம் குறித்து தவறாக பேசியதால் கங்கனாவை தாக்கியதாக குல்வீந்தர் கவுர் கூறினார். இதனிடையே பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பெண் போலீஸ் குல்வீந்தர் கவுருக்கு பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவை முக்கிய அமைப்புகளும் அடங்கும். இந்த விவகாரம் தொடர்பாக குல்வீந்தர் கவுரின் சகோதரர் கூறும்போது, "இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலம் அறிந்தோம். எனது சகோதரி கடந்த 15 ஆண்டுகளாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். அவர் சென்னை, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிந்துள்ளார்" என்று கூறினார்.