குடிபோதையில் ஓடும் பஸ்சில் தொல்லை.... 26 முறை கன்னத்தில் அறை வாங்கிய நபர்
|பஸ்சில் அத்துமீறிய குடிகார நபரை 26 முறை பெண் ஒருவர் சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனே,
மராட்டிய மாநிலம் புனேயில் ஓடும் அரசு பஸ்சில் பெண், குடிகார நபர் ஒருவரை சரமாரியாக கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதுதொடர்பான அந்த வீடியோவில் பெண் ஒருவர், மதுபோதையில் இருக்கும் ஆசாமியை சரமாரியாக தாக்குகிறார். பஸ் பயணத்தின் போது அந்த நபர் தன்னை தகாத முறையில் தொட முயன்றதாக அந்த பெண் கூறுகிறார்.
வீடியோவில் பேசும் அந்த பெண், 'நீ நன்றாக குடித்து இருக்கிறாய். எனக்கு தொல்லை கொடுக்கிறாய்' என்கிறார். அதற்கு அந்த நபர், 'சாரி, சகோதரி. நான் எதுவும் செய்யவில்லை' என்கிறார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத பெண், அவரை சரமாரியாக கன்னத்தில் அறைகிறார். 2 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் அந்த பெண் சுமார் 26 முறை குடிபோதையில் இருந்த நபரை கன்னத்தில் அறைகிறார்.
மேலும் பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்செல்லுமாறு டிரைவரிடம் கூறுகிறார். சம்பவத்தின் போது பஸ்சில் இருந்த பயணிகள் ஒருவர் கூட பெண்ணை தடுக்கவோ அல்லது போதை ஆசாமியை கண்டிக்கவோ இல்லை. அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். போதை ஆசாமியை சரமாரியாக அறைந்த பெண் ஷீரடியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை என்பது தெரியவந்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆசிரியை கூறுகையில், "கணவர் மற்றும் குழந்தையுடன் பயணித்த என்னிடமே ஒருவர் அத்துமீறுகிறார் என்றால், தனியே செல்லும் பெண்களின் நிலை என்ன? பஸ்சில் எனக்கு நடந்த அத்துமீறலை சக பயணிகளும், பெண்களும் பார்த்தும்கூட உதவ முன்வராதது வருத்தமளிக்கிறது. இனியாவது இதுபோன்ற விஷயத்தில் பெண்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். பெண்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்பினால் தான் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.