< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவு:  முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழைப்பொழிவு: முதல்-மந்திரி

தினத்தந்தி
|
1 Dec 2024 3:00 PM IST

புதுச்சேரியில் 50 செ.மீ. அளவுக்கு இரவில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி முதல்-மந்திரி என். ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, புதுச்சேரியில் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். வெள்ள நீரில் சிக்கி தவிக்கும் நபர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் ஓய்வின்றி ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

பெஞ்சல் புயல், புதுச்சேரியில் தீவிர கனமழையை கொண்டு வந்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மொத்தம் 48.4 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 1995 முதல் 2024 வரையிலான 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 24 மணிநேரத்தில் பெய்த மொத்த மழையில் இது அதிக அளவாகும்.

இந்த சூழலில், ராணுவ மேஜர் அஜய் சங்வான் தலைமையிலான குழுவினர், கிருஷ்ணா நகர் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சில இடங்களில் 5 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால், 500 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் பரிதவித்து நின்றனர். காலை 6.15 மணியளவில் தொடங்கிய அவர்களுடைய மீட்பு பணியில் முதல் 2 மணிநேரத்தில் 100 பேர் வரை மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்