உண்மையான, சரியான தகவலை உடனடியாக வெளியிடுக: தேர்தல் ஆணையத்திற்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம்
|தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் 2 மணிநேரம் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது என ஜெய்ராம் ரமேஷ் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
அரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொது செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையத்திற்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், அரியானா சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிய உண்மையான மற்றும் சரியான எண்ணிக்கையை கொண்ட தகவலை தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் அல்லது செயலியில் அடுத்தடுத்து சேர்க்கும்படி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
இதனால், பொய்யான செய்திகள் மற்றும் கெட்ட நோக்கத்துடனான தகவல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார். இதற்கு முன், காலை 9 முதல் 11 மணி வரையிலான 2 மணிநேரம் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது. இதனால், தேர்தல் நடைமுறையை வலுவிழக்க செய்யும் வகையில், சிலர் பொய்யான தகவல்களை சமூக ஊடகத்தில் பரப்புவதற்கு அனுமதித்து விடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.