தேசிய செய்திகள்
தீவிர தேர்தல் பிரசாரத்திற்காக.. பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தீவிர தேர்தல் பிரசாரத்திற்காக.. பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை

தினத்தந்தி
|
28 Oct 2024 6:20 AM IST

இன்று வயநாடு செல்லும் பிரியங்கா காந்தி, 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதில் ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும். இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது.

இதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். அவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் உடன் சென்று கடந்த 23-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால், காங்கிரசார் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா காந்தி இன்று (திங்கட்கிழமை) வயநாட்டுக்கு வருகை தருகிறார். அவர் இன்று, நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் குமார் எம்.எல்.ஏ., "வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று முதல் 2 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சுல்தான்பத்தேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனங்காடி, மானந்தவாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனமரம், கல்பெட்டா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வைத்திரி அருகே பொழுதனா, நாளை திருவம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏங்கப்புழா, எரநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேரட்டுங்கல், வாண்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பாடு, நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலம்பூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் அவர், மீண்டும் ஒரு முறை பிரசாரம் செய்ய வருவார்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்