வயநாடு மக்களின் மறுவாழ்வு முயற்சிகளை மோடி அரசு புறக்கணிக்கிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
|பல மாதங்களாகியும் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க வேண்டிய எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு,
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதில் ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும். இதையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது.
இதன்படி வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். அவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் உடன் சென்று கடந்த 23-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜனதா சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால், காங்கிரசார் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் நேற்று தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். பின்னர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்ற பிரியங்கா காந்தி அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.
இதனை தொடர்ந்து, இன்று ஈங்கப்புழாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கூறியதாவது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்களின் மறுவாழ்வு பணிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு புறக்கணிக்கிறது. மத்தியில் உள்ள மோடி அரசு எடுத்துள்ள நிலைப்பாடு, மக்கள் மற்றும் தேசத்தின் மீதான மரியாதையின்மையை காட்டுகிறது என்றும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதன் கொள்கைகளில் இருந்து தெளிவாக தெரிகிறது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்ட பிரதமர் மோடி, அவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். ஆனால் பல மாதங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.