நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
|நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
பாட்னா,
நாளந்தா பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415-455) நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும்.
நாளந்தா நகரம் பாட்னாவில் இருந்து 55 மைல் தொலைவில் உள்ளது. இது புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது.
இந்த பல்கலைக்கழகத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள்.
இப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது. மகாயான பவுத்த தத்துவங்களுடன், வேதங்கள், தர்க்கம், இலக்கணம், வான இயல், மருத்துவம், சாங்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது.
இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். யுவான் சுவாங் இப்பல்கலைக்கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.
அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1,500 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இப்பல்கலைக்கழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர், திங்கநாகர், ஸ்திரமதி, சிலாபத்திரர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
பின்னர், 1,197ம் ஆண்டு டெல்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜியின் படைவீரர்களால் நாளந்தா பல்கலைக்கழகம் முற்றாக அழிக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
அதன்பின்னர், 2007ம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று 2010ம் ஆண்டு முதல் நாளந்தா பல்கலைக்கழகத்தில் மீண்டும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளந்தா பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த புதிய வளாகம் நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த புதிய வளாகத்திற்கு உள்ளே சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், பீகார் கவர்னர் ராஜேந்திர வி.அர்லேகார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு நாளந்தாவின் பழங்கால இடிபாடுகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். பழங்கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகள் கடந்த 2016-ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஞ்சி கடிகை பல்கலைக்கழகம்
நாளந்தா போலவே தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தில் காஞ்சி கடிகை என்ற பெயரில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் இருந்ததாக வரலாற்று ஆவணங்களில் கூறப்பட்டு உள்ளது.
பல்லவர் ஆட்சி காலத்தில் 5-ம் நூற்றாண்டு முதல் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டு உள்ளது. இதை உறுதிப்படுத்தும் கல்வெட்டுகள் கர்நாடக மாநிலம் தலகுண்டா என்ற இடத்தில் உள்ளன. இதை லெவீஸ் ரைஸ், கீல் ஹார்ன் போன்ற ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
சீன அறிஞர் யுவான் சுவாங்கும் காஞ்சீபுரம் வந்து இருக்கிறார். காஞ்சீபுரத்தில் பெரிய நூலகம் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே நாளந்தா போல காஞ்சி கடிகை பல்கலைக்கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.