'கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும்' - டி.ராஜா
|தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும் என டி.ராஜா தெரிவித்துள்ளார்.
ராஞ்சி,
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன. அவர் ஒரு கவர்னர்தான், சர்வாதிகாரி அல்ல. இதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னால் எதுவும் செய்ய முடியும் என்றும் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை ஜனாதிபதி கவனித்து, கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.