பதவி ஏற்பு விழாவில் 144 முறை எழுந்து, உட்கார்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
|பிரதமர் மோடி பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடந்தது.
புதுடெல்லி,
நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகளாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த கோலாகல விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 144 முறை எழுந்து உட்கார்ந்தார். அதாவது ஒவ்வொருவரின் பதவிப்பிரமாணத்தின் தொடக்கத்திலும், பிறகு அவர்கள் கையெழுத்திட்டு வணக்கம் தெரிவிக்கும் போதும் ஜனாதிபதி எழுந்து, பின் உட்கார்ந்தார்.
இதைப்போல பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோர் 70 முறைக்கு மேல் எழுந்து உட்கார்ந்தனர். பதவி ஏற்ற மந்திரிகள், பதவி ஏற்று முடிந்ததும் பிரதமரின் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தபோது பிரதமரும், மற்ற 2 மந்திரிகளும் எழுந்து நின்று பதில் வணக்கம் தெரிவித்தனர்.