ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்
|ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசாவில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவிலில் 4-ந்தேதி (நாளை) சாமி தரிசனம் செய்து பூஜையிலும் கலந்து கொள்கிறார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (3-ந்தேதி) முதல் 7-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு, ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுபற்றி வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் முதல் நாள் பயணத்தின்போது, பிரபல சந்தாலி எழுத்தாளரான பண்டிட் ரகுநாத் முர்முவின் புதிய சிலையை திறந்து வைக்கிறார். 4-ந்தேதி பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பூஜையிலும் கலந்து கொள்கிறார். கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்திலும், இந்திய கடற்படை நாள் கொண்டாட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
இதன்பின்னர், 5-ந்தேதி புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். 6-ந்தேதி ராய்ரங்கப்பூரில் உள்ள மகிளா மகாவித்யாலயா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடுகிறார். உபர்பேடா கிராமவாசிகள் மற்றும் மாணவர்களுடனும் அவர் உரையாடுகிறார்.
தொடர்ந்து 7-ந்தேதி, ராய்ரங்கப்பூரில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம், தந்த்போஸ் விமான நிலையம் மற்றும் சப்-டிவிசனல் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கியும் வைக்க இருக்கிறார்.