
மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
2025-26 நிதி ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சவுதாவில் பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். மேலும், மேகதாது திட்டம் குறித்தும் பேசினார். சித்தராமையா கூறியதாவது:- மேகதாது நீர்தேக்கத்திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் மத்திய அரசின் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.
மேகதாது விவகாரம்:
தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. எனினும், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதால், அணை கட்டக்கூடாது என்பதில்தமிழக அரசு உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக உத்தேசித்துள்ள திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது என்பதையும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.