< Back
தேசிய செய்திகள்
யூடியூப்பில் பிரபலமான தம்பதி தற்கொலை: காரணம் என்ன..?
தேசிய செய்திகள்

யூடியூப்பில் பிரபலமான தம்பதி தற்கொலை: காரணம் என்ன..?

தினத்தந்தி
|
28 Oct 2024 7:39 AM IST

யூடியூப்பில் பிரபலமான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

குமரி எல்லையில் உள்ள கேரள பகுதியான பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (40). இவர்களுக்கு சேது என்ற மகனும், பிரீது என்ற மகளும் உள்ளனர். மகன் சேது பட்டப்படிப்பை முடித்து விட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார்.

செல்வராஜும், பிரியாவும் சமீப காலமாக யூடியூப் சேனல் நடத்தி வந்தனர். இதில் தங்களது வீட்டு நிகழ்ச்சிகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை பகிர்ந்து வந்தனர். இவர்கள் கடைசியாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இதற்கிடையே மகன் சேது, தாய் தந்தையிடம் செல்போனில் ேபச முயன்றார். ஆனால் அவர்கள் செல்போனை எடுத்து பேசவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சேது எர்ணாகுளத்தில் இருந்து நேற்று வீட்டுக்கு வந்தார். வீட்டின் சுற்றுச்சுவர் கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உடனே பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது செல்வராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அருகே பிரியா கட்டிலில் விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் பாறசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர்களுக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. மேலும் இவர்களது சமூக வலைத்தள பதிவுக்கு போதிய ஆதரவு கிடைக்காததாலும், எதிர்மறை கருத்துகள் வந்ததாலும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளனர். இந்தநிலையில் தான் இருவரும் தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்