டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பா..? விசாரணை தீவிரம்
|சி.ஆர்.பி.எப். பள்ளி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ரோகிணி பகுதியில் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப். பள்ளி அருகே நேற்று முன்தினம் வெடிகுண்டு வெடித்தது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர், அருகில் உள்ள கடைகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. எனினும் இந்த பயங்கர சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், என்.ஐ.ஏ. அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் சதி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு பின் நேற்று முன்தினம் மாலையில் 'இந்தியாவுக்கான நீதி லீக்' என்ற அமைப்பு குண்டு வெடிப்பு தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை டெலிகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு காலிஸ்தான் ஆதரவு கோஷத்துடன் மிரட்டல் விடுத்திருந்தது. இது குறித்து விசாரித்து வரும் டெல்லி போலீசார், அந்த பதிவை வெளியிட்டவர்களின் விவரங்களை கேட்டு டெலிகிராம் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதனிடையே குண்டு வெடிப்பை தொடர்ந்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக வெளிநபர்கள் அதிகமாக வந்து செல்லும் சாந்தினி சவுக், ஆசாத்பூர், காஜிப்பூர் போன்ற பகுதிகள் போலீசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். எந்தவித அசம்பாவிதங்களையும் தவிர்க்கும் வகையில் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லி எல்லைப்பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போல தலைநகரில் உள்ள ரெயில் மற்றும் மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் முழுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளன.