< Back
தேசிய செய்திகள்
கொல்கத்தாவில் போலீசார் அடக்குமுறை; மம்தா பானர்ஜிக்கு நட்டா கண்டனம்
தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் போலீசார் அடக்குமுறை; மம்தா பானர்ஜிக்கு நட்டா கண்டனம்

தினத்தந்தி
|
27 Aug 2024 7:10 PM IST

மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அடக்குமுறையை கையாண்டுள்ளனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

இந்த சூழலில், நபன்னாவில் உள்ள மேற்கு வங்காள தலைமை செயலகம் நோக்கி பேரணி ஒன்றை நடத்துவது என பொதுமக்களில் ஒரு பிரிவினர் சார்பில் முடிவானது. எனினும், இதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்த சூழலில், நபன்னா அபியான் பேரணி இன்று நடைபெற்றது.

இதில் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைந்து போக செய்தனர். ஹவுரா பாலம், சந்திரகாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் அடக்குமுறையை கையாண்டுள்ளனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், ஜனநாயக கொள்கைகள் மீது மதிப்பு வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும், கொல்கத்தாவில் அடக்குமுறையை மேற்கொண்ட போலீசாரின் புகைப்படங்களை பார்த்து ஆத்திரம் அடைந்து உள்ளனர்.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மேற்கு வங்காளத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் மற்றும் குற்றம் இழைப்பவர்களுக்கும் உதவும் வகையில் மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால், பெண்களின் பாதுகாப்புக்காக பேசுவது என்பது ஒரு குற்றம் என்று பதிவிட்டு உள்ளார்.

போராட்டக்காரர்கள் தலைமை செயலகம் நோக்கி செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பான்களை தாக்க முற்பட்டனர். இதேபோன்று பாதுகாப்பு படையினரை நோக்கி கற்கள் மற்றும் செங்கற்களை வீசியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தும் சூழல் உருவானது. அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைந்து போக செய்ய போலீசார் முயற்சித்தனர்.

மேலும் செய்திகள்