மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
|மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த 1955-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி பிறந்தார் என அதிகாரப்பூர்வ பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது அவரது உண்மையான பிறந்த தேதி இல்லை என்று கூறப்படுகிறது. மம்தா பானர்ஜி 1995-ம் ஆண்டு எழுதிய 'ஏகாண்டே' என்ற சுயசரிதை புத்தகத்தில் தனது பிறப்பு துர்கா பூஜை சமயத்தில் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஜனவரி 5-ந்தேதி மம்தா பானர்ஜியின் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி கடந்த சில ஆண்டுகளாக மம்தா பானர்ஜிக்கு தவறாமல் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் பிறந்தநாளில், அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வங்காள மொழியில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், "திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.