பிரதமர் மோடி குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்
|குஜராத் ஏக்நா நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் வதோதராவில் நாட்டின் முதலாவது தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். ஸ்பெயின் பிரதமரும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். டாடா நிறுவனம் இந்த விமான உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்றும் நாளையும் பிரதமர் மோடி மீண்டும் குஜராத் பயணம் மேற்கொள்கிறார். குஜராத் ஏக்நா நகரில் மாலை 5.30 மணியளவில் ரூ280 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துதல், அணுகலை மேம்படுத்துதல் மற்றும் இப்பகுதியில் நிலைத்தன்மை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதன்பிறகு, மாலை 6 மணியளவில், ஆரம்ப் 6.0-இன் 99-வது ராஸ்ட்ரீய ஏக்தா திவாஸ் விழாவை முன்னிட்டு பயிற்சி அதிகாரிகளிடையே அவர் உரையாற்றுகிறார்.
நாளை அக்டோபர் 31 அன்று, தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி , சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்கவைத்து, ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கிறார். இதில் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேச காவல்துறை, 4 மத்திய ஆயுத காவல்படைகள், தேசிய மாணவர் படை மற்றும் அணிவகுப்பு இசைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த 16 அணிவகுப்புக் குழுக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.