< Back
தேசிய செய்திகள்
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்
தேசிய செய்திகள்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்

தினத்தந்தி
|
12 Jun 2024 6:00 PM IST

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இத்தாலி செல்ல உள்ளார்.

டெல்லி,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்த மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இத்தாலி தலைமை தாங்கி நடத்துகிறது. இம்மாநாடு நாளை தொடங்கி வரும் 15ம் தேதி வரை இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா உள்பட 12 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா சார்பில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில், ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை இத்தாலி செல்கிறார். இந்த மாநாட்டில் உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர், பொருளாதார முன்னேற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்