ஒடிசாவில் 29-ம் தேதி டி.ஜி.பி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
|3 நாள் மாநாட்டையொட்டி புவனேஸ்வரத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில டி.ஜி.பி. ஒய்.பி.குரானியா கூறியுள்ளார்.
புவனேஸ்வரம்,
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 1-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச போலீஸ் டி.ஜி.பி.க்கள், ரா உள்ளிட்ட மத்திய உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இதுபற்றி ஒடிசா மாநில டி.ஜி.பி. ஒய்.பி.குரானியா கூறுகையில், 3 நாள் மாநாட்டையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புவனேஸ்வரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். கடந்த 2013 வரையில் இந்த மாநாடு டெல்லியில் மட்டும் நடைபெற்று வந்தது. 2014 முதல் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.