< Back
தேசிய செய்திகள்
ஊடுருவல்காரர்கள்.. மாபியாவின் அடிமை: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி மீது  மோடி தாக்கு
தேசிய செய்திகள்

ஊடுருவல்காரர்கள்.. மாபியாவின் அடிமை: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி மீது மோடி தாக்கு

தினத்தந்தி
|
4 Nov 2024 3:23 PM IST

ஜார்க்கண்டில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவதற்கான நேரம் இது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வங்காளதேச ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு அளிப்பதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) தலைமையிலான கூட்டணி பிசியாக உள்ளது. இது, நாட்டிற்கும் பழங்குடியின மக்களுக்கும் அச்சுறுத்தல். இந்த கூட்டணி ஊடுருவல்காரர்களின் கூட்டணியாகவும், மாபியாவின் கூட்டணியாகவும் உள்ளது.

ஊழல் கரையான்கள் நாட்டை அரித்து ஒன்றுமில்லாமல் ஆக்குகின்றன. ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஊழல் வரம்புகளை தாண்டிவிட்டன. இது ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பாதித்துள்ளது. இதை சரிசெய்ய பா.ஜ.க.வால் மட்டுமே முடியும்.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய ஆயிரக்கணக்கான கோடிகளை ஜே.எம்.எம். தலைமையிலான கூட்டணி முறைகேடாக பயன்படுத்தி உள்ளது. எனவே, அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியை உறுதி செய்ய ஜார்க்கண்டில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவதற்கான நேரம் இது.

ஜார்க்கண்டில் உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜே.எம்.எம். தலைமையிலான கூட்டணி முன்னேற்றத்தை தடுக்க முயற்சிக்கிறது. நிறுத்தப்பட்ட வடக்கு கோயல் நீர்த்தேக்க திட்டம் இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும்.

ஜார்க்கண்ட் பா.ஜ.க. ஒரு சிறந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோகா திதி திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 நிதியுதவி மற்றும் யுவ சதி பாட்டா திட்டத்தின் கீழ் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் போன்ற நம்பிக்கைக்குரிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜே.எம்.எம்., காங்கிரஸ், ஆர்.ஜே.டி. ஆகிய கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.க.வை காப்பி அடிக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்