பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி
|எல்.கே. அத்வானியை தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷியையும், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து மோடி வாழ்த்து பெற்றார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
இதற்காக இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார். இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.
இந்த நிலையில் பாரத ரத்னா விருதை பெற்றவரும், பா.ஜ.க.வின் முன்னாள் தலைவருமான எல்.கே. அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து மோடி வாழ்ந்து பெற்றார். எல்.கே. அத்வானியை தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷியையும், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
3வது முறை பிரதமராக மோடி வரும் 9ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.