மத்திய பிரதேசத்தில் ரூ.44,605 கோடி மதிப்பிலான நதிநீர் இணைப்பு திட்டம் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
|மத்திய பிரதேசத்தில் ரூ.44,605 கோடி மதிப்பிலான நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, கஜுராஹோவில் கென் மற்றும் பெத்வா ஆகிய இரு நதிகளை இணைக்கும் கென்-பெத்வா நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்தின் மூலம் மத்திய பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 44 லட்சம் மக்களும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுமார் 21 லட்சம் மக்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கென்-பெத்வா நதிநீர் இணைப்பு திட்டம் சுமார் ரூ.44,605 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக 103 மெகாவாட் நீர் மின்சக்தி மற்றும் 27 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என்றும், இத்திட்டத்தின் மூலம் 2,000 கிராமங்களில் உள்ள 7.18 லட்சம் விவசாய குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பெத்வா மற்றும் கென் ஆகிய இரு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரை, பிரதமர் மோடியிடம் மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பட்டீல் மற்றும் மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ் ஆகியோர் வழங்கினர். அந்த தண்ணீரை கென்-பெத்வா நதிநீர் இணைப்பு திட்டத்தின் மாதிரி வடிவத்தின் மேல் ஊற்றி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கந்த்வா மாவட்டத்தில், ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரியசக்தி திட்டத்தையும் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, நினைவு தபால் தலை மற்றும் நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.