டெல்லி மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
|டெல்லி மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவில் பயணிகள் சேவை இன்று மாலை 3 மணி முதல் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் ஜனக்புரி மேற்கு பகுதி முதல் கிருஷ்ணா பூங்கா வரையிலான மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உள்ளார். இந்த கிருஷ்ணா பூங்கா விரிவாக்க நிலையத்துடன் சேர்த்து, டெல்லி மெட்ரோ நெட்வொர்க்கானது, மொத்தம் 289 நிலையங்களையும் 394.448 கிலோ மீட்டரையும் உள்ளடக்கி இருக்கிறது.
ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொடானிக்கல் கார்டன் முதல் ஜனக்புரி மேற்கு பகுதி வரையிலான பிரிவுடன் இந்த புதிய பிரிவானது விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த 4-ம் கட்ட விரிவாக்க பிரிவில் பயணிகள் சேவை இன்று மாலை 3 மணி முதல் தொடங்கியுள்ளது.
இதேபோன்று, 26.5 கி.மீ. தொலைவிலான ரிதலா-நரேலா-குந்திலி வழித்தடத்திற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி இன்று நாட்டியுள்ளார்.
இந்த வழித்தடத்தில் 21 நிலையங்கள் இருக்கும். இதனால், ரோகிணி, பாவனா மற்றும் குந்திலி பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன் பெறுவர். டெல்லி, அரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே இணைப்பை மேம்படுத்தும் வகையில் வழித்தடம் அமைவதுடன், குடியிருப்பு, வர்த்தகம் மற்றும் தொழில் மண்டலங்களை எளிதில் சென்றடைய முடியும்.