
வாக்குறுதியை மறந்த பிரதமர் மோடி, கங்கை மாதாவை ஏமாற்றிய பாஜக அரசு - கார்கே குற்றச்சாட்டு

கங்கை தேவியின் குளிர்கால வாசஸ்தலத்திற்குச் சென்றது பாக்கியமாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.முக்வா கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு ஹர்சிலில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி,
கங்கை தேவியின் குளிர்கால வாசஸ்தலத்திற்குச் சென்றது பாக்கியமாக உணர்கிறேன். "மா கங்கை என்னைத் தத்தெடுத்ததாக நான் நினைக்கிறேன். அவரது ஆசீர்வாதங்களே என்னை காசிக்கு அழைத்துச் சென்று மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தன.உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். உத்தரகாண்ட் மாநிலத்தை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கெ எக்ஸ் தள பதிவில்,
மோடி ஜி கங்கை மாதா தன்னை அழைத்தார் என்று கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் கங்கை நதியை சுத்தம் செய்வதற்கான தனது வாக்குறுதியை மறந்துவிட்டார்.நவாமி கங்கை திட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் கீழ் ரூ.42,500 கோடி மார்ச் 2026-க்குள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 2024 வரை ரூ.19,271 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்பதை காட்டுகின்றன. அதாவது நவாமி கங்கை திட்டத்தின் நிதியில் 55 சதவீதத்தை மோடி அரசு செலவிடவில்லை. மா கங்கை மீது ஏன் இவ்வளவு அலட்சியம்?
2015-ம் ஆண்டில், மோடி ஜி என்.ஆர்.ஐ நண்பர்களை தூய்மை கங்கை நிதிக்கு பங்களிக்குமாறு வலியுறுத்தினார். மார்ச் 2024 வரை இந்த நிதிக்கு ரூ.876 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. ஆனால் அதில் 56.7 சதவீதம் நிதி இன்னும் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிதியில் சுமார் 53 சதவீதம் அரசு நிறுவனங்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 82 சதவீதம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (STPs) கட்டுவதற்கு செலவிடப்பட வேண்டும் என்றும், ஆனால் அவற்றில் 39 சதவீதம் கூட இன்னும் முடிக்கப்படவில்லை.உத்தரபிரதேசத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய கழிவுநீர் நேரடியாக கங்கையில் வெளியேற்றப்படுகிறது. 97 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை.
மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் கங்கையின் தூய்மையைப் பராமரிக்க நிர்வாகம் "தோல்வியடைந்துவிட்டது" என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. கங்கை நீர் குளிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்று கூறி, ஆற்றங்கரையில் ஒரு பலகையை நிறுவவும் தீர்ப்பாயம் பரிந்துரைத்தது. மே மற்றும் ஜூன் 2024 க்கு இடையில் கங்கையில் பிளாஸ்டிக் மாசுபாடு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
கங்கா கிராம் என்ற பெயரில், மோடி அரசு கழிப்பறைகளை மட்டுமே கட்டியுள்ளது. ஐந்து மாநிலங்களில் கங்கை நதிக்கரையோரம் 1,34,106 ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் வளர்ப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான செலவு ரூ. 2,294 கோடி என்று கூறி இருந்தது. ஆனால் 2022 வரை, காடு வளர்ப்பில் 78 சதவீதம் செய்யப்படவில்லை, மேலும் 85 சதவீத நிதி பயன்படுத்தப்படவில்லை என்று ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வெளிப்படுத்தியுள்ளது என்று கார்கே கூறியுள்ளார். மேலும் வாக்குறுதியை மறந்த மோடி அரசாங்கம் நதியை சுத்தம் செய்தல் என்ற பெயரில் 'கங்கை மாதாவை'ஏமாற்றியுள்ளது என்று அதில் பதிவிட்டுள்ளார்.