நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி
|17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
புதுடெல்லி,
அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி. நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு செல்கிறார். 17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது, இந்தியா மற்றும் நைஜீரியா இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடமும் அவர் உரையாற்றுகிறார்.
நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, ரியோ டி ஜெனிரோ நகரில் 18ம் தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைக்கிறார்.
இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் உள்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது அவரது 3-வது பிரேசில் பயணமாகும். இதற்கு முன்பு 2014 மற்றும் 2019-ல் பிரேசில் சென்று இருந்தார்.
அதை தொடர்ந்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 19ம் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார். 20ம் தேதி அதிபர் இர்பான் அலியை சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 21ம் தேதி கயானா பயணத்தை முடிந்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.