< Back
தேசிய செய்திகள்
இந்தியா தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது - மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
தேசிய செய்திகள்

இந்தியா தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது - மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
26 Dec 2024 11:15 PM IST

மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13-வது பிரதமராக பதவி வகித்தவர். சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். பிரதமராவதற்கு முன்பு, 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் நிதி மந்திரியாகவும் இருந்துள்ளார்.

அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. அவர் எளிமையான இடத்தில் இருந்து மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதி மந்திரி உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றிய அவர், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.

மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத்தின் முதல்வராகவும் இருந்தபோது, நானும் அவரும் அடிக்கடி உரையாடினோம். ஆளுகை தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் தெரியும்.

துக்கமான இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுடன் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்