பா.ஜனதா உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்தார் பிரதமர் மோடி
|6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பாஜகவின் 'சக்ரியா சதாஸ்யதா அபியான்' என்ற அமைப்பைத் தொடங்கி வைத்ததன் மூலம், பிரதமர் மோடி தனது உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டார்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதிலும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்து தன்னை கட்சியின் முதல் உறுப்பினராக மீண்டும் இணைத்து கொண்டார். இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற முறையில், இன்று சக்ரியா சதாஸ்யத் அபியானைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். இது நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும். கட்சியின் 'செயலில் உள்ள உறுப்பினர்' ஒரு சாவடி அல்லது சட்டமன்றத் தொகுதியில் குறைந்தது 50 நபர்களை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வரும் காலங்களில் கட்சிக்காக பணியாற்ற அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்குகிறது. ஏற்கனவே உள்ள ஒவ்வொரு பாஜக உறுப்பினரும் தன்னை புதிதாக பதிவு செய்ய வேண்டும், அதே நேரத்தில் புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்படுகிறார்கள்.