வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியை தகுதிநீக்கம் செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு
|வயநாடு எம்பி பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் என்பவர், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பிரியங்கா காந்தி தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில், அவருடைய சொத்துகள் குறித்தும், குடும்பத்தின் சொத்துகள் குறித்தும் தவறான தகவல்களை வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், ஊழல் குற்றச்சாட்டுக்கு சமமானது என்றும் கூறியுள்ளார்.
எனவே பிரியங்கா காந்தியின் வெற்றியை ரத்து செய்து, அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று நவ்யா ஹரிதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கேரள ஐகோர்ட்டிற்கு வரும் 23-ந்தேதி(நாளை) முதல் ஜனவரி 5-ந்தேதி வரை விடுமுறை நாட்கள் என்பதால், இந்த வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.