< Back
தேசிய செய்திகள்
ஹேமா கமிஷன் அறிக்கை : சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு  கேரள அரசு எதிர்ப்பு
தேசிய செய்திகள்

ஹேமா கமிஷன் அறிக்கை : சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு கேரள அரசு எதிர்ப்பு

தினத்தந்தி
|
17 Nov 2024 12:07 PM IST

ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரிய மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கை மலையாள சினிமா உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி திரைப்படத் தயாரிப்பாளர் சஜிமோன் பாறயில் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மேல்முறையீடு மனுவுக்கு கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழுவை கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஹேமா கமிஷன் அறிக்கை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு இதுவரை 26 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது, 10 வழக்குகளில் முதல்கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.

முதல்கட்ட விசாரணை 14 நாட்களுக்குள் நிறைவடையும். சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. எனவே சி.பி.ஐ. விசாரணை கோரும் இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்