சபரிமலை 18 படிகளில் நின்று புகைப்படம் எடுத்த போலீஸ்காரர்கள்: விளக்கம் கேட்ட உயர் அதிகாரி
|போலீஸ்காரர்கள் கோவில் சன்னிதானத்தை நோக்கி முதுகை காட்டியபடி படிக்கட்டுகளில் நின்று போஸ் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பத்தனம்திட்டா:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள புனிதம் மிக்க 18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி விடுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு குழுவினர் கடந்த சனிக்கிழமை பணி முடிந்து புறப்பட்டு செல்வதற்கு முன்பு, 18 படிகளில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.
சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே, 18 படிகளில் ஏறி சன்னிதானம் சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் பூசாரிகள்கூட கீழே இறங்கும்போது தங்கள் முகத்தை திருப்பி சன்னிதானத்தை நோக்கி பார்த்தபடியே 18 படிகள் வழியாக இறங்குவார்கள். ஆனால், போலீஸ்காரர்கள் இந்த நடைமுறைக்கு மாறாக, கோவில் சன்னிதானத்தை நோக்கி முதுகை காட்டியபடி படிக்கட்டுகளில் நின்று போஸ் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது சபரிமலை ஐதீகங்களுக்கு எதிரானது என்று பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி பைஜுவிடம், ஏடிஜிபி ஸ்ரீஜித் விளக்கம் கேட்டுள்ளார். விளக்கம் கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
இந்த புகைப்படம் மதியம் கோவில் நடை சாற்றப்பட்டபிறகு எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.