தங்கும் விடுதியில் இளம்பெண் கொலை: கத்தியால் குத்திய நபரை கைது செய்த போலீசார்
|விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணை, அபிஷேக் கத்தியால் குத்துவது, கழுத்தை அறுப்பது போன்ற வீடியோ காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
பெங்களூரு,
பெங்களூரு கோரமங்களா வி.ஆர். லே-அவுட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் வசித்து வந்தவர் கிருதிகுமாரி (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார். கடந்த 23-ந்தேதி இரவு 11 மணியளவில் தங்கும் விடுதியின் 3-வது மாடிக்கு வந்த ஒரு மர்மநபர் கிருதிகுமாரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டதுடன், தங்கும் விடுதி, அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது தங்கும் விடுதியில் உள்ள கேமராவில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்தது. அதன்மூலம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளி மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அபிஷேக் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கடந்த வாரம் கூட அபிஷேக் தங்கும் விடுதிக்கு வந்து காவலாளியுடன் சண்டை போட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது. கடந்த 23-ந்தேதி இரவு 11 மணியளவில் விடுதி காவலாளி சாப்பிட சென்ற சந்தர்ப்பத்தில் உள்ளே புகுந்து கிருதிகுமாரியை கொலை செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கிருதிகுமாரியுடன் ஒரே அறையில் விடுதியில் தங்கி இருந்த மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தான் அபிஷேக் காதலித்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, அந்த இளம்பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் விசாரித்ததில் பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அபிஷேக்கும், இளம்பெண்ணும் முதலில் பெங்களூருவில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் போது காதல் மலர்ந்துள்ளது. பின்னர் அவர்கள் தனியார் தங்கும் விடுதியில் கணவன், மனைவி போல் வசித்து வந்துள்ளனர். கடந்த மாதம் அபிஷேக் வேலையை விட்டு நின்றுவிட்டார். அதன்பிறகு வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார். இதனால் அபிஷேக்கிற்கும், காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அபிஷேக்கிடம் இருந்து இளம்பெண் விலகி சென்றுள்ளார். அதன்பிறகு இளம்பெண்ணுக்கு கிருதிகுமாரியுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த வாரம் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதிக்கு சென்று தங்கினார்.அபிஷேக்குடனான காதலை கைவிடும்படி கிருதிகுமாரி, இளம்பெண்ணுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று விடுதி காவலாளி சாப்பிட சென்றபோது உள்ளே புகுந்த அபிஷேக் 3-வது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு தனது காதலி தங்கியுள்ள அறையின் கதவை தட்டியுள்ளார். அப்போது காதலி வெளியே சென்றிருந்ததால், கிருதிகுமாரி கதவை திறந்துள்ளார். உடனே வாசலில் நின்ற அபிஷேக் தான் வைத்திருந்த கத்தியால் காதலி தான் என நினைத்து கிருதிகுமாரியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது.
ஆள்மாறாட்டத்தால் கிருதிகுமாரி கொலை செய்யப்பட்டாரா?, காதலியிடம் தன்னை பற்றி கிருதிகுமாரி தவறாக கூறியதால் அவரை கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அபிஷேக்கை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இதற்கிடையில், கிருதிகுமாரியை விடுதிக்குள் புகுந்து அபிஷேக் கத்தியால் குத்துவது, கழுத்தை அறுப்பது போன்ற வீடியோ காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
இந்நிலையில் பெங்களூருவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொடூரமாக கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அபிஷேக், இன்று மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் மேல்விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து வரப்படுகிறார் என போலீசார் தெரிவித்தனர்.