புதுச்சேரியில் உயரப்போகும் பெட்ரோல் விலை: ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்
|புதுச்சேரியில் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வருகிற 1-ந்தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையே உள்ள பெட்ரோல், டீசல் விலை வேறுபாட்டை குறைக்கவும், புதுச்சேரி மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின் (வாட்) கீழ் பெட்ரோல், டீசலுக்கு திருத்தப்பட்ட வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திருத்தப்பட்ட வரி விகிதங்கள் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் வரி 14.55 சதவீதத்திலிருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்கால் பகுதியில் 14.55 சதவீதத்திலிருந்து 16.99 சதவீதமாகவும், மாஹே பகுதியில் 13.32 சதவீதத்திலிருந்து 15.79 சதவீதமாகவும், ஏனாமில் 15.26 சதவீதத்திலிருந்து 17.69 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் மீதான வாட் வரி புதுச்சேரியில் 8.65 சதவீதத்திலிருந்து 11.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. காரைக்காலில் 8.65 சதவீதத்திலிருந்து 11.23 சதவீதமாகவும், மாஹேவில் 6.91 சதவீதத்திலிருந்து 9.52 சதவீதமாகவும், ஏனாமில் 8.91 சதவீதத்திலிருந்து 11.48 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாஹேவில் ரூ. 91.92 மற்றும் ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ. 84.31, மாஹேவில் ரூ. 81.90 மற்றும் ஏனாமில் ரூ.84.75 இருந்து வருகிறது.
தற்போது வாட் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.26, காரைக்காலில் 96.03, மாஹேவில் 93.92, ஏனாமில் 96.92 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் டீசல் லிட்டருக்கு ரூ. 86.48, காரைக்காலில் ரூ.84. 31, மாஹேவில் ரூ. 81.90, ஏனாமில் ரூ. 84. 75 உயர்த்தப்படுகிறது.
இந்த விலை உயர்வினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல், பெட்ரோல் விலை ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டாலும் தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களை விட புதுவையில் விலை குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.