< Back
தேசிய செய்திகள்
Pawan Kalyan, a minister in the 10 years since the party started
தேசிய செய்திகள்

கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் அமைச்சரான பவன் கல்யாண்

தினத்தந்தி
|
12 Jun 2024 1:24 PM IST

ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றார்.

விஜயவாடா,

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல் .ஏ.க்கள் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் முன்மொழிந்தார். பா.ஜனதா மாநில தலைவர் டகுபதி புரந்தேஸ்வரி இதை ஆதரித்தார்.தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதை ஏற்றுக்கொண்டதால் சட்டசபை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்குமாறு சந்திரபாபு நாயுடுவிற்கு ஆந்திர கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆந்திர பிரதேச அமைச்சர்களில் ஒருவராக பதவியேற்றார். 2014- ல் ஜனசேனா கட்சியை தொடங்கிய பவன் கல்யாண், 10 ஆண்டுகளில் அமைச்சராக பதவியேற்று இருக்கிறார்.

இவர்களுடன் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், கே.அச்சன்நாயுடு, நாதெண்டலா மனோகர் உள்ளிட்டவர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முதல்-மந்திரியாக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவை ஆரத்தழுவி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்