< Back
தேசிய செய்திகள்
Patna High Court
தேசிய செய்திகள்

பீகாரில் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் சட்டம் ரத்து - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
20 Jun 2024 10:34 AM GMT

பீகாரில் இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரிப்பதற்கான திருத்த சட்டத்தை பாட்னா ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் தற்பொழுது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது. அதன் விவரங்கள் அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து பீகாரில் இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்துவதற்கான திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 43 சதவீதமும், பட்டியலின மக்களுக்கு 20 சதவீதமும், பழங்குடியின மக்களுக்கு 2 சதவீதமும் உயர்த்தப்பட்டது. இந்த இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான ஐகோர்ட்டு டிவிஷன் அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசனம் வழங்கிய சம உரிமையை இந்த திருத்த சட்டம் பின்பற்றவில்லை என்பதால், 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திருத்தத்தை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்