< Back
உலக செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு ஜோ பைடன், புதின், ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
உலக செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு ஜோ பைடன், புதின், ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து

தினத்தந்தி
|
5 Jun 2024 9:25 PM IST

3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன. பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், வருகிற 8-ந்தேதி மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தென் கொரியா அதிபர் யூன் சுக் ரியோல், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கால்ப்ஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒன்றாகப் பணிபுரிய விருப்பம் உள்ளதாக உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துகள். உங்கள் வெற்றியால் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் அதிகரிக்கும்" என்று வாழ்த்தியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை இந்தியா நடத்தி முடித்து உள்ளது. எனது அன்பு நண்பர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்து மோடி உடன் தான் எடுத்து கொண்ட செல்பி படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இங்கிலாந்தும் இந்தியாவும் மிக நெருக்கமான நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன. அந்த நட்பு தொடர்ந்து செழித்து வளரும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்