"ஒட்டுண்ணி காங்கிரஸ்..." - மக்களவையில் கடுமையாக விமர்சனம் செய்த பிரதமர் மோடி
|3-வது முறையாக தேர்தெடுக்கப்பட்டுள்ள நாங்கள், 3 மடங்கு வேகத்துடன் செயல்படுவோம் என மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பா.ஜனதா எம் பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். மக்களவை விவாதம் ஒன்றில் எதிர்க்கட்சி தலைவராக அவர் ஆற்றிய இந்த முதல் உரையில் பிரதமர் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் ஆவேசமாக பதில் அளித்ததால், விவாதம் அனல் பறந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாததிற்கு பதிலளித்து பிரதமர் மோடி தற்போது பேசி வருகிறார். பிரதமர் மோடி பேச்சை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளிக்கு இடையே பேசிய பிரதமர் மோடி, "3-வது முறையாக தேர்தெடுக்கப்பட்டுள்ள நாங்கள், 3 மடங்கு வேகத்துடன் செயல்படுவோம். மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக கேரளாவில் பா.ஜனதா எம்.பி. வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் போட்டியிட்ட பல இடங்களில் 2-வது இடங்களை பெற்றுள்ளோம். அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.
நாங்கள் திறம்பட பணியாற்றினோம் என்பது மக்களுக்கு தெரியும். இந்தியாவை வல்லரசு நாடாக்க 24 மணி நேரமும் உழைக்க தயராக இருக்கிறோம். 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாக தெரிகிறது. ஏழைகளின் நலனுக்காக நாங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்.வாக்கு வங்கி அரசியல் தேசத்தை சீர்குலைத்து விட்டது.
எதிர்க்கட்சி வரிசையில் அமர தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்தனர். இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசால் 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 240 இடங்களை கூட தொட முடியவில்லை. காங்கிரஸ் 100க்கு 99 இடங்களை வாங்கவில்லை. 543க்கு 99 இடங்களை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்வியில் சாதனை படைத்துள்ளது.
தற்போது இருப்பது ஒட்டுண்ணி காங்கிரஸ். கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி, வாக்கு வங்கி குறைவு. கூட்டணி கட்சி பலத்தை தன் பலமாக காட்ட முயலும் ஒட்டுண்ணி காங்கிரஸ். தமிழகம், பீகாரில் ஜூனியர் பார்ட்னராக தேர்தலை எதிர்கொண்டது. 13 மாநிலங்களில் ஜீரோவான காங்கிரஸ் தன்னை ஹீரோவாக காட்டுகிறது.
இந்திய மக்கள் மீது சர்வாதிகாரத்தை வலுக்கட்டாயமாக திணித்தது காங்கிரஸ். அவசர நிலையின்போது அரசியல் சாசனம் ஒடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள் ஆபத்தானவை. இந்திய மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கொண்டாடுகிறார்கள். வடக்கிற்கு எதிராக தெற்கில் காங்கிரஸ் பேசுகிறது.
தேசத்தை பிளவுபடுத்தும் வதந்திகளை காங்கிரஸ் தொடர்ந்து பரப்பி வருகிறது.
அவையில் தவறான தகவல்களை கூறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமார் ஒன்றரை மணி நேர பிரதமர் மோடியின் பதிலுரையில் ஜனாதிபதி உரை பற்றி அம்சங்கள் பெரிதாக இடம்பெறவில்லை.
2029ம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்கும். 13 மாநிலங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத ராகுல் காந்தி எப்படி ஹீரோவாக முடியும்?. இந்துக்களை இழிவுபடுத்தும் சதி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்துக்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. கூட்டணி கட்சியினர் இந்து மதத்தை அவமதித்த பேசிய போது, அந்த கருத்துகளை ஆதரித்தவர் ராகுல் காந்தி. இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க இந்து மக்கள் தான் காரணம்" என்று அவர் கூறினார்.