நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு: பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்
|காயமடைந்த பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
புதுடெல்லி,
அரசியல் சாசனம் மீது மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று இரு அவைகளும் முடங்கின.
நாடாளுமன்றம் இன்று காலை கூடியதும் இரு அவைகளிலும் அம்பேத்கர் விவகாரம் இன்றும் எழுப்பப்பட்டது. இதனால், அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கின. எதிர்க்கட்சிகள் அமளியால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகிய இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.