< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற அமளி: காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற அமளி: காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

தினத்தந்தி
|
23 Dec 2024 12:33 PM IST

உடல்நிலை முன்னேறியதால் காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 17ம் தேதி நடந்த அரசியல் சாசனம் மீதான சிறப்பு விவாதத்தின்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகிவிட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்" என்றார்.

அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவமதித்ததாக கூறி காங்கிரஸ் மற்றும் பாஜக மாறிமாறி குற்றம்சாட்டின. அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய எம்.பி.க்களை நாடாளுமன்ற பிரதான வாயிலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 2 பாஜக எம்.பி.க்கள் இன்று மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து இருவரும் நேற்று முன்தினம் வார்டுக்கு மாற்றப்பட்டனர். தற்போது அவர்களின் உடல்நிலை முன்னேறியதால் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்