
மேகாலயா: 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் திருட்டு

மேகாலயாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் திருடப்பட்டுள்ளது.
சில்லாங்,
மேகாலயாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 35 முதல் 40 மில்லியன் ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய புதைபடிவம் திருடப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவின் தெற்கு காரோ மலைகளில் உள்ள டோலிக்ரே கிராமத்தில் ஒரு புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) அந்த இடத்தை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தது. இந்த புதைபடிவம் திமிங்கலங்களின் முன்னோடிகளான அழிந்துபோன ரோடோசெட்டஸ் அல்லது அம்புலோசெட்டஸின் புதைபடிவமாக இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த புதைபடிவத்தின் ஒரு பகுதியை யாரோ வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிஜு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேகாலயா கல்வி மந்திரி ரக்கம் சங்மா கூறும்போது, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. புதைபடிவத்தின் ஒரு பகுதி வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த புதைபடிவம் நம் மாநிலம் மற்றும் நாட்டின் சொத்து. குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்வோம். இந்த இடத்தில் அருங்காட்சியகம் கட்டுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வந்தது" என்று கூறினார்.