< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

தினத்தந்தி
|
2 Dec 2024 12:47 PM IST

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதனை தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இரு அவைகளும் மீண்டும் தொடங்கியபோது, அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் வெள்ள நிவாரணம் கோரி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்