மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
|மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த நிகழ்வும் அரங்கேறியது.
இந்த நிலையில், இன்றைய தினம் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பு யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், மீறி யாரேனும் போராட்டம் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். தொடர்ந்து மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் ஆளுங்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேநீர் விருந்தை புறக்கணித்தனர்.