நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
|அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. ஆனால் அதானி முறைகேடு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் முதல் வாரத்தில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை. கடந்த வாரத்திலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இரு அவைகளும் முறைப்படி இயங்கின.
ஆனால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் அமைப்புடன் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்பு இருப்பதாக கடந்த 5-ந்தேதி பா.ஜனதாவினர் இரு அவைகளிலும் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து அன்று முதல் இரு அவைகளும் மீண்டும் பெரும் புயலை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், அதானி விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பிரதமர் மோடி, அதானி புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பைகளை அணிந்து எம்.பி.க்கள் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முடங்கின. அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.